15 பில்லியன் முதலீடு! கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படப்போகும் பெரும் மாற்றம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது பயணிகள் முனையத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 15 பில்லியன் ரூபாய் முதலீட்டில் நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பயணிகள் சேவைகளை விரிவுப்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நவீனமயமாக்கல் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா வளர்ச்சி
மேலும், விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், இது நாட்டின் விமான நிலையத் திறனை விரிவுபடுத்துவதற்கும், பிராந்திய விமானப் போக்குவரத்து மையமாக இலங்கையின் நிலையை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் அடுத்தடுத்து முன்னேறி வருவதால், வரும் ஆண்டுகளில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விரிவான அபிவிருத்தி நடவடிக்கைகளின் மையமாக காணப்படும் என்றும், திட்டமிடப்பட்ட இந்த முதலீடுகள் நாட்டின் நீண்டகாலப் பொருளாதார மற்றும் சுற்றுலா வளர்ச்சி இலக்குகளுக்குப் பக்கபலமாக அமையும் என்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்