ரஷ்ய போருக்கு எதிராக ஜி 7 - நேட்டோவின் ஒற்றுமைக்கு பைடன் அழைப்பு
உலகில் செல்வந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஜேர்மனியில் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஜேர்மனியில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
தென் பிராந்தியத்திலுள்ள பெவேரியா மாநிலத்தின் அல்ப்ஸ் நகரில் இன்று ஆரம்பமாகியுள்ள இந்த உச்சி மாநாடு, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ரஷ்யாவை தண்டிக்கும் நடவடிக்கை
ரஷ்யாவை தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துவரும் நாடுகளின் கூட்டணி பிளவுபடுவதை தடுப்பது, எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாப்பது மற்றும் பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கான மூலோபயங்கள் குறித்து ஜி 7 நாடுகளின் தலைவர்கள் விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உச்சி மாநாட்டின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஐரோப்பிய பேரவையின் தலைவர் சார்ள்ஸ் மிச்சேல், ரஷ்யா முன்னெடுக்கும் போருக்கு பிராண வாயுவாக இருக்கும் விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா முன்னெடுக்கும் யுத்தமானது உலகத்தையே ஆபத்திற்குள் தள்ளியுள்ளதாகவும், இந்தப் போர் காரணமாக உணவு மற்றும் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் சார்ள்ஸ் மிச்சேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக விலைகள் அதிகரித்துள்ளதுடன், உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் ஜி 7 நாடுகளும் அசையாத ஒற்றுமையுடன் இருப்பதாகவும் ஐரோப்பிய பேரவையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு நிதி, மனிதாபிமான மற்றும் அரசியல் ஆதரவை தொடர்ந்து வழங்கும் எனவும் சார்ள்ஸ் மிச்சேல் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஜி 7 நாடுகளின் மாநாட்டிற்கு முன்னதாக ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ்சை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்குலக நாடுகள் ஒன்றுபட வேண்டும்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்குலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதன்போது தெரிவித்துள்ளார்.
நேட்டோவும் ஜி 7 நாடுகளும் பிளவுபடும் என ஆரம்பத்தில் இருந்தே விளாடிமீர் புடின் எண்ணிக்கொண்டிருப்பதாகவும் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல அனுமதிக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரன் ஆகியோரும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ள அதேவேளை, உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் இருதரப்பினரும் இணக்கத்தை எட்டியுள்ளதாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.