காசாவில் பலியான தொண்டு நிறுவன பணிப்பாளர்கள் : இஸ்ரேலுக்கு எதிராக கொந்தளிக்கும் உலக நாடுகள்
மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கார் மீது வீசப்பட்ட குண்டு வெடித்ததில் அரசு சாரா தொண்டு நிறுவனமான வேர்ல்டு சென்ட்ரல் கிச்சன் (world central Kitchen) அமைப்பின் வெளிநாட்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தொண்டு நிறுவன பணியாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தவறுதலாக தாக்குதல் நடத்தபட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
சோகமான சம்பவம்
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறும்போது, "உதவிப் பணியாளர்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது, இந்த நிகழ்வு கடுமையான தவறு. சிக்கலான சூழ்நிலைகளில் தவறாக அடையாளம் காணப்பட்டதன் விளைவாக இது ஏற்பட்டுவிட்டது. இது நடந்திருக்கக் கூடாது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்றார்.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும்போது, "இது ஒரு சோகமான சம்பவம். துரதிர்ஷ்டமானது மற்றும் திட்டமிடப்படாதது. ஆனால் போர் காலத்தில் இது போன்று நடக்கும்" என்றார்.
உடனடி விசாரணை
இந்நிலையில், உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன். ஸ்பெயின் (Spain) மற்றும் போலந்தும் (Poland) ஆகிய நாடுகள் இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்க இஸ்ரேலை இங்கிலாந்து வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, "பொதுமக்களைப் பாதுகாப்பதில் போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் செய்யவில்லை" என்று குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |