படையெடுத்தால் பாரிய விளைவை சந்திப்பீர்கள் - புடினை கடுமையாக எச்சரித்த பைடன்
உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா மிகப்பாரிய விலையை கொடுக்க நேரிடும் என புடினுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைந்த உடன் (பெப்.20) உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருவது தொடர்பாகவும், அதிகரிக்கும் போர் பதற்றம் தொடர்பாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் வீடியோ கோல் மூலம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் மீது படையெடுத்தால் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் உடனடியாக எதிர்வினையாற்றுவோம் என ரஷ்ய அதிபர் புடினிடம் ஜோ பைடன் கூறினார்.
மேலும், உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் எனவும் புடினை பைடன் எச்சரித்தார். அத்துடன், உக்ரைன் மீதான படையெடுப்பு மிகப்பெரிய அளவில் மனித பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும், உலகில் ரஷ்யாவின் நிலை மங்கிவிடும் எனவும் புடினிடம் பைடன் கூறினார்.
இந்த விவகாரத்தில் ராஜாங்க ரீதியில் தீர்வுகாண முயற்சிகள் நடைபெற்று வரும் போதும் அனைத்து சூழ்நிலைகளுக்கும் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் புடினிடம் பைடன் கூறியுள்ளார்.
1 மணி நேரத்திற்கு மேல் பைடன் - புடின் இடையே இந்த பேச்சுவார்த்தை நீடித்துள்ளது. ஆனாலும், புடினின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், உக்ரைன் எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.
