இருளில் மூழ்கியது மகசின் சிறைச்சாலை - துண்டிக்கப்பட்டது மின்சாரம்
மின்சாரம் துண்டிப்பு
கடந்த வருட மின்கட்டணத்தில் 15 இலட்சம் ரூபா நிலுவைத் தொகை செலுத்தப்படாமையால் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கான பணத்தை நிதியமைச்சு வழங்க வேண்டும் எனவும், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இதுவரை பணம் கிடைக்கப்பெறவில்லை எனவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தவர்கள்
தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, நிலுவைத்தொகையை செலுத்துவதற்கு மேலும் ஒரு கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு சிறைச்சாலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மகசின் சிறைச்சாலையில் இன்று 1,600 சந்தேக நபர்கள் உள்ளனர். இவர்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தவர்கள் உட்பட பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களும் அடங்குவர்.
மின்வெட்டு காரணமாக மின் பிறப்பாக்கியை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 15 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.
மின்வெட்டு சிறைச்சாலையின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
