கோட்டாவின் புத்தகம் தொடங்கி பிள்ளையானின் புத்தகம் வரை! பூகம்பத்தை உருவாக்க போகும் புத்தக அரசியல்?
சாத்தான் வேதம் ஓதத் தொடங்கியதைப் போல் தற்போது இலங்கையில் புத்தக அரசியல் மூலம் ஏதோ ஒன்றை ஓதி சிங்கள மக்களை மீண்டும் இனவாதத்தின் உச்சிக் கொம்பில் ஏற்றிவிடலாம் என ராஜபக்ச குடும்பத்தினர் நினைக்கின்றனர்.
ராஜபக்ச குடும்பத்தின் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உள்ள குற்றச்சாட்டுகள், மற்றும் நாடு வங்குரோத்து நிலைக்கு போவதற்கு காரணமான ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் ஆட்சி தொடர்பாக சிங்கள மக்களிடம் ஏற்பட்டிருக்கும் மனோநிலையை மாற்றி அதற்கு பதில் வழங்கும் முகமாகவே தெற்கில் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ள நிலையில் கிழக்கில் ராஜபக்ச குடும்பத்தின் பங்காளியான பிள்ளையான் ஊடாக ஒரு புத்தகத்தை வெளியிட உள்ளனர்.
தெற்கில் கோட்டபய ராஜபக்சவினால் வெளியிடப் பட்ட புத்தகம் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதன் பின்னணியில் தமிழ், முஸ்லீம் தரப்புக்களே இருந்தனர் என்ற ஒரு விம்பத்தை உருவாக்கி மீண்டும் சிங்கள மக்களுக்கு இனவாத மனநிலையை உருவாக்கி இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றி விடலாம் என கருதுகின்றனர்.
அதேபோல் தங்கள் மீதான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு கிழக்கில் பிள்ளையான் வெளியிட இருக்கும் புத்தகம் ஊடாக பதிலளிக்க முயற்சிகள் நடைபெறுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனால் வெளியிடப்படவுள்ள புத்தகம் இலங்கையில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிபீடம் ஏறுவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட சதிச் செயல் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் Chanel-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய ஆதாரங்கள் உள்ளிட்ட சம்பவங்களுக்கு பதில் வழங்கும் வகையில் பிள்ளையானின் புத்தகம் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும் முகமாக இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் வெளியிடப்படவுள்ள புத்தகத்தில் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல தகவல்களும் வெளியாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. புத்தக வெளியீட்டுக்கான ஏற்பாடுகள் மட்டக்களப்பில் மிக மும்முரமாக நடைபெற்றுவருவதாகவும், மூடிய அறைக்குள் வைத்து பிள்ளையானின் அந்தப் புத்தகம் வெளியிடப்படலாம் என்றும் பிள்ளையானுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறு இருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படாத நிலையில் எத்தனை புத்தகங்கள் வெளிவந்தாலும் அது இஸ்லாமிய சமூகத்தின் மீதான இனவாத சிந்தனையை வளர்க்குமே தவிர இலங்கையில் உள்ளதாக கூறப்படும் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒரு போதும் அழிக்காது.