74 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் தமிழர்கள் - மாவை ஆதங்கம்
கடந்த 74 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களுக்கு இலங்கையில் சுதந்திரம் கிடைக்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
சிறிலங்காவின் 75ஆவது சுதந்திர தினத்தினை இருள் சூழ்ந்த சுதந்திரம் எனப் பிரகடனப்படுத்தி, மட்டக்களப்பில் இன்று இலங்கை தமிழரசுக் கட்சி மேற்கொண்ட போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய போராட்டம்
மேலும் உரையாற்றிய அவர், “1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி இதைப் போன்று பல்லாயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய ஒரு போராட்டத்தை ஆரம்பித்து மட்டக்களப்பு காவல் நிலையம் வரை முற்றுகையிடப்பட்ட வகையில் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு முழுவதும் 61 ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலும் அறவழிப் போராட்டத்தை தந்தை செல்வா ஆரம்பித்து நடத்தியபொழுது அந்தப்போராட்டத்தால் இந்த நாட்டில் மூன்று மாதங்களுக்கு அரசாட்சி இல்லை என்றே சந்தேகப்பட்டார்கள்.
இந்த அரசாங்கம் ஆச்சரியமான முறையில் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றது.
ரணில் விக்ரமசிங்க ஆச்சரியமான முறையில் நாடளுமன்றத்திற்கு வந்து ஆச்சரியமான முறையில் பிரதமராக வந்து தற்பொழுது நாட்டினுடைய அதிபராக இருக்கின்றார்.
ரணிலின் வாக்குறுதி
இந்த சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் கைதிகளின் விடுதலை, இனப்பிரச்சினைக்கான தீர்வு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குதல் போன்ற விடயங்களை பெற்றுத்தருவதாக கூறினார்.
அதிபர் இந்த வார்த்தைகளை கூறிய போது ஒரு ஆறுதல் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது நிச்சயமாக இருக்க மாட்டாது என்பதை மனதில் எண்ணினோம்.
இந்த அதிபர் எவ்வாறு ஆச்சரியமான முறையில் அதிபராக வந்தாரோ அதேபோன்று இந்த நாட்டில் இருக்கின்றதான தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, அமைதி, விடுதலை தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என நாங்கள் நம்பினோம்” - என்றார்.
