ஜனவரி இறுதி கறுப்பு வாரம் - நாடு பூராகவும் திரட்டப்படும் மனு - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக அறிவிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுயாதீனமான அரசாங்கத்தின் வரித் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த வாரம் கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
இதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அரசின் வரிச்சுமை
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு மக்கள் மீது அதிகளவான வரிச்சுமைகளை திணிக்க தீர்மானித்துள்ளது.
இதனால் அனைத்து வர்க்க மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் திரட்டப்படும் மனு
குறித்த எதிப்பு நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் நாடுபூராகவும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மனுவொன்று சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட நாடுபூராகவும் உள்ள 20000 வைத்தியர்களிடம் இருந்து குறித்த மனு திரட்டப்பட்டு, வருகின்ற ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.