மட்டக்களப்பில் போராட்டம் : அம்பாறையில் இருந்து வந்தவர்களை அச்சுறுத்திய காவல்துறை
புதிய இணைப்பு
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கில் கரி நாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கப்படும் போராட்டமானது மட்டக்களப்பு - கல்லடிப்பாலத்திற்கு அருகிலிருந்து தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது திருகோணமலை வீதியூடாக மட்டக்களப்பு நகரத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது.
இந்தப் பேரணியிலே கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு
மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் கரிநாள் போராட்டத்திற்காக அம்பாறையிலிருந்து வந்தவர்களை இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் காவல்துறையினரும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி செல்வராணி தெரிவித்தார்.
அதன்படி, தாங்கள் வந்த பேருந்துகளை மறித்து அதற்குள் கஞ்சா பொதிகளை வைத்து தம்மை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (04) காலை திருகோவிலில் இருந்து இரண்டு பேருந்துகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும்போது அக்கரைப்பற்றில் இராணுவ புலனாய்வுத்துறையினரால் மறிக்கப்பட்டது.
அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடு
இதன்போது இராணுவ புலனாய்வுத்துறையினரும் காவல்துறை உத்தியோகத்தரும் பேருந்தில் வேறு பொருட்கள் இருப்பதாக கூறி குறித்த இரண்டு பேருந்துகளிலும் கஞ்சா பொதிகளை வைத்து தம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக குறிப்பிட்டனர்.

இதேபோன்று வேறு இடங்களிலிருந்து சிங்கள இளைஞர்களையும் சிங்கள ஊடகவியலாளர்களையும் அழைத்துவந்து தமக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்ததாகவும் தெரிவித்தனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |