யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் திறன்விருத்திக் கண்காட்சி
யாழ்ப்பாணத்தில் பார்வையற்றவர்களுக்கான லங்கா அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் பார்வையற்றோருக்கான “திறன்விருத்திக்காட்சிக்களம்“ எனும் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் விழியிழந்தவர்கள் தமது வரலாறு காணாத கைத்தொழில் வித்தையினையும் தமது கல்வி, கலை, ஆற்றல்களை விருந்தாகவும் வெளிப்படுத்தக் காத்திருக்கின்றார்கள்.
இந்தக் கண்காட்சியில்
1. அங்கம் குறைந்தவர்களின் அறிவியல் ஆற்றல்.
2. விழியிழந்தவர்கள் விரல் கொண்டு செய்யும் விசைப்பலகையின் வித்தை.
3. எம் தலையெழுத்தை மாற்றிய பிறெய்லி எழுத்து தானம் தொட்டுஞானம் ஊட்டும் கணக்கியல் காட்சி காணவாரீர்.
4. வெண்பிரம்பே எங்கள் விழிநரம்பு தட்டித்தடம் பதித்து தனித்துவம் காட்டுவோம்.
5. உள்ளங்கைக்குள் உறவாயிருந்து உடன்பிறப்பாகவே உலகம் காட்டும் தொடத்தொடவே சில்மிசம் செய்யும் தொலைபேசியின் தொழில்நுட்பம் பாரீர்!
6. ஒலிக்கும் பந்தில் ஜொலிக்கும் ஆற்றல் சத்தம் கேட்டே துடுப்பாடும் ஆற்றல்.
7. கையேந்தி வாழாது கண்ணிழந்த யாவரும் கைகொடுத்து வாழ்வதற்காய் கைக்கொள்ளும் கைத்தொழில்கள் (கதிரை பின்னுதல், விளக்குமாறு உற்பத்தி, தும்புத்துடைப்பான் உற்பத்தி, வாகனத்திருத்தம்)
ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
வாருங்கள், பாருங்கள், வாய்ப்பைத் தாருங்கள் என்ற வாசகங்களோடு நடைபெறவுள்ள இக்கண்காட்சி நிகழ்வில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர் பார்வையற்றவர்களுக்கான லங்கா அறக்கட்டளை நிதியத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |