சீனாவுக்கான விஜயத்தை இடைநிறுத்தினார் அன்ரனி பிளிங்கன்
சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் இடைநிறுத்தியுள்ளார்.
அமெரிக்காவை சீன பலூன் ஒன்று கண்காணித்து வரும் பின்னணியிலேயே, அவர் இந்த பயணத்தை இடைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயர்மட்டக் கலந்துரையாடல்
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையில் பல வருடங்களுக்குப் பின்னர் நடைபெறவிருந்த முதல் உயர்மட்டக் கலந்துரையாடலில் பங்கேற்கும் நோக்கில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் சீனாவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளவிருந்தார்.
எவ்வாறாயினும், அமெரிக்க வானில் சீனா தனது கண்கணிப்பு பலூனை பறக்கவிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் அதனை இடைநிறுத்தியுள்ளார்.
அத்துடன், குறித்த பலூன் உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளதோடு இது தனது நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பலூன் விவகாரம்
மேலும், சீனாவின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் இது அந்த நாட்டின் பொறுப்பற்ற செயல் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா கண்காணிப்பதாக தெரிவித்த பலூன் வானிலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டதாகவும், இதில் உளவு பார்க்கும் கருவிகள் எதுவும் இல்லையெனவும் சீனா தெரிவித்துள்ளது.