பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்பட்ட இலங்கையரின் சடலம் நாட்டிற்கு!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினருக்கிடையிலான போரில் உயிரிழந்த இரண்டாவது இலங்கை பிரஜையான சுஜித் யடவர பண்டாரவின் உடல் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இஸ்ரேலில் இருந்து டுபாய் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து இன்று காலை இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினருக்கிடையில் தொடர்ந்து வரும் போர் காரணமாக பலர் உயிரிழந்து வரும் நிலையில், ஹமாஸ் இயக்கதினால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்பட்ட இலங்கை பிரஜையான சுஜித் யடவர பண்டார, கடந்த 3 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
இறுதிக் கிரியைகள்
இதனை இஸ்ரேல் காவல்துறையினர் உறுதிப்படுத்தியதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
இந்த நிலையில், சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இன்று இலங்கையை சென்றடைந்துள்ளது.
சுஜித் யடவர பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி உள்ளிட்ட குடும்பத்தினர், இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி ஆகியோர் அவரது சடலத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, அவரது இறுதிக் கிரியைகள் வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அவரது மனைவி ஜயனி மதுவந்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் கடந்த 28 ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில், 30 ஆம் திகதி அவரது இறுதி கிரியைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.