கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் -பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டிய மாணவன் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
14 வயதான மாணவன் தன்னுடைய அலைபேசியில் இருந்து விமான நிலையத்தின் அவசர பிரிவுக்கு நேற்று (25) மாலை போலியான அழைப்பை மேற்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக சோதனை நடவடிக்கை
அந்தத் தகவலின் பிரகாரம் உடனடியாக சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். எனினும், சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் அழைப்பை எடுத்த அதே மாணவன், “ குண்டு இல்லை. நகைச்சுவைக்காக அழைப்பை எடுத்தே இவ்வாறு பொய் கூறினேன்” என தெரிவித்துள்ளார்.
கடுமையான எச்சரிக்கை
அலைபேசியின் அழைப்பை வைத்து, களுபோவில சுனந்தாராம வீதியைச் சேர்ந்த மாணவனை காவல்துறைக்கு அழைத்த காவல்துறையினர், இதன் பாரிய விளைவுகள் தெரியாமல் அழைப்பை எடுத்தமையால், கடுமையாக எச்சரித்து மாணவனை விடுவித்துள்ளோம் என தெரிவித்தனர்.
