மூளை சாவடைந்தவரின் குடும்பத்தினர் எடுத்துள்ள முடிவு - குவியும் பாராட்டு!
மூளை சாவடைந்த நபர் ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வாகன விபத்துக்கு உள்ளாகி பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளை சாவடைந்த நபரின் உடல் உறுப்புகளே குடும்பத்தினரின் அனுமதியுடன் தானம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில், மூளை சாவடைந்தவரை விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக வைத்தியசாலையின் பிரதான மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹசலக மகாஹஸ்வெத்தும கிராமத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 48 வயதான எம்.ஜீ. சந்திம என்பவரின் உடல் உறுப்புகளையே தானம் செய்ய உறவினர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
தொடர்ந்தும் உயிர்வாழ முடியாது
குடும்பத்தினரின் இந்த முடிவை பலரும் பாராட்டியுள்ளனர். ஹசலக பிரதேச சபையில் சாரதியாக தொழில் புரிந்து வந்த இந்த நபர், பணி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக முதலில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், பின்னர் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவரது மூளை செயலிழந்து விட்டதால், அவரால் தொடர்ந்தும் உயிர் வாழ முடியாது என மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
உடல் உறுப்பு தானம் செய்ய தீர்மானித்த குடும்பத்தினர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவரை மரணத்தில் இருந்து காப்பாற்ற முடியாது என்றால், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவியும் பிள்ளைகளும் தீர்மானித்து, அதனை மருத்துவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனடிப்படையில், பதுளை வைத்தியசாலையில் மருத்துவர்கள் குழு, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அறிவித்து, தேவையான நடவடிக்கைகளை தயார் செய்துள்ளனர்.
உலங்குவானூர்தி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ள மூளை சாவடைந்தவரின் இதயம், வெளிநாட்டு மருத்துவர்களின் உதவியுடன் வேறு நோயாளிக்கு பொருத்தப்பட உள்ளது.
பயனடைந்த நோயாளர்கள்
நுரையீரல் மற்றும் கல்லீரல் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், சீறுநீரகங்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் இரண்டு நோயாளிகளுக்கும் பொருத்தப்படவுள்ளன.
பதுளை வைத்தியசாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மூளை சாவடைந்தவரின் உடலில் இருந்து உறுப்புகள் எடுக்கப்பட்ட பின்னர், உடலை பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மரண விசாரணைகளை நடத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பதுளை வைத்தியசாலையின் பிரதான மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.