திடீர் குடல் அடைப்பு...! மருத்துவமனையில் பிரேசில் முன்னாள் ஜனாதிபதி
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் குடல் அடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
71 வயதான அவர், வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அறுவைச் சிகிச்சை
அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் பிரேசிலின் DF Star மருத்துவமனை நேற்று (21.11.2026) வெளியிட்ட அறிக்கையில், அவருக்கு நரம்பு வழியாகத் திரவங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்கும் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மூக்கின் வழியாகச் செலுத்தப்பட்ட குழாயின் ஊடாக வயிற்றில் தேங்கியுள்ள உணவுக் கழிவுகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதுடன், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அவர் எப்போது மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார் என்பது தொடர்பில் இதுவரை எவ்விபரவும் தெரிவிக்கப்படவில்லை.
இதேவேளை, அவரது மகனும் செனட்டராகத் தெரிவு செய்யப்பட்டவருமான கார்லோஸ் போல்சனாரோ, தனது தந்தையின் உடல்நிலை முன்னேற்றமடையும் என சமூக ஊடகங்கள் வாயிலாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், தனது தந்தைக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியில் ஜெய்ர் போல்சனாரோவுக்கு மேற்கொள்ளப்படும் 10ஆவது அறுவைச் சிகிச்சையாக அது அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |