தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையை உடைக்க திரைமறைவு நகர்வு
தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வை எட்டவேண்டும் என்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஓரணியாக தமிழ் தேசியக் கட்சிகள் கையெழுத்திட்டு இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பும்வேளை, அதனை குழப்புவதற்காக ஏதோவொரு திரைமறைவு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் நின்றுகொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயலாற்றுகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் (Vino Nokarathalingam) தெரிவித்தார்.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் மறைந்த ஊடகவயிலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக் கட்சிகளை ஏமாற்ற முயற்சிக்கின்றன.
நாம் சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றால் தான் நீண்ட காலமாக புரையோடிப்போயிருக்கின்ற அரசியல் தீர்வாக இருந்தாலும் அல்லது இனப்பிரச்சினைக்கான நீடித்து நிலைக்க கூடிய தீர்வாக இருந்தாலும் அதற்கு சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் மகிந்த - கோட்டாபய கூட்டுக் குடும்ப அரசாங்கம் எந்த தீர்வையும் வழங்காது என்பது இப்போது எமக்கு தெரிந்த விடயமாகவே உள்ளது.
ஆகவே நாம் ஒற்றுமைப்பட வேண்டும் இல்லாவிட்டால் எமக்கான தீர்வு எட்டாக்கனியாவே இருக்கும். அவ்வாறு ஒற்றுமையாக செயற்பட்டால் தான் எமது மக்களுக்கான தீர்வை பெற சர்வதேசத்தின் ஆதரவுடன் பயணிக்க முடியும். இல்லாவிட்டால் தொடர்ந்தும் நாம் ஒவ்வொரு விடயத்திற்கும் போராட வேண்டிய நிலைதான் ஏற்படும்.
தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லாமல் தொடர்ந்தும் பிளவுபட்டுக்கொண்டிருப்பதானது எமது தமிழ் கட்சிகளுக்குள் காணப்படும் மிகப்பெரிய சாபக்கேடு. தமிழ் தேசியப்பரப்பில் உள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக ஒற்றுமையாக சாத்தியமான ஜதார்த்தமான தற்போது தமிழ் மக்களுக்கு என்ன தேவையோ அதனை முன்னிறுத்தி தற்காலிகமாகவேனும் ஒரு தீர்வை எட்டவேண்டும் என்பதற்காக 13 ஆவது திருத்த சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரியும், எமது அரசியல் தீர்வு சமஸ்டி முறையிலாக இருக்க வேண்டும்.
அதுவே எமது இலக்கு என்பதனை கூட்டிக்காட்டியும் அனைவரும் கையெழுத்திட்டு இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பும்வேளை அதனை குழப்புவதற்காக ஏதோவொரு திரைமறைவு அரசியல் நிகழ்சிக்கு பின்னால் நின்றுகொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயலாற்றுகின்றனர். அதற்கு இந்த ஒற்றுமைப்பட்ட கட்சிகளுக்குள்ளும் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 30 ஆம் திகதி இந்த ஒற்றுமைக்கு எதிராக செய்யும் போராட்டத்திற்கு தமிழரசுக்கட்சிக்குள் ஒரு சிலரும் பிரசாரம் செய்கின்றனர். அவர்கள் அங்கு ஒரு முகத்தினையும் இங்கு ஒரு முகத்தினையும் காட்டி வருகின்றனர். இதுவே தமிழ் மக்களின் ஒரு சாபம்.
எமது தமிழ் தேசியக்கட்சிகளின் ஒற்றுமையை ஆரம்பத்திலேயே உடைத்து அழித்து விட வேண்டும் என்பதற்காக எமக்குள் இருக்கின்ற சிலரும் வெளியில் உள்ள சிலரும் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். எனினும் நாம் அர்ப்பணிப்புடன் இதில் செயற்படுவதனால் அவர்களுடைய முயற்சிகளை உடைத்தெறிவோம்” - என்றார்.
