ஜேவிபியுடன் தொடர்பு! லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் பதிலடி
ஜேவியின் சட்டக்குழுவில் பணியாற்றியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க மறுத்துள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மூலம் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான விசாரணைகளைத் தடம் புரளச் செய்ய வேண்டுமென்றே முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2004 ஒக்டோபரில் நீதித்துறையில் சேருவதற்கு முன்பு 2000 முதல் 2004 வரை சட்டத்தரணியாக பணியாற்றியதாகவும், ஜேவிபியின் எந்தவொரு அமைப்பிலும் தான் ஒருபோதும் ஈடுபடவில்லை என்றும் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொய் குற்றச்சாட்டு
இந்த நிலையில், குறித்த கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் இது தொடர்பில் ஆணைக்குழுவின் ஆணையாளர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு தனது மகனை கொழும்பு ரோயல் கல்லூரியில் சேர்ப்பதற்கு தலையிட்டதாக பொய்யாகக் குற்றம் சாட்டி, ஒரு நபர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவை அவமதிக்க முயன்றதாகவும் நீதிபதி ரங்க திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அச்சமடைந்திருப்பவர்களின் செயல்
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளால் அச்சமடைந்துள்ளவர்களே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஐதேக உறுப்பினருமான நந்தன குணதிலக்க, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது, ரங்க திசாநாயக்க ஜேவிபியின் சட்ட அதிகாரியாக தனக்கு கீழ் பணியாற்றியதாகக் கூறியதற்கு பதிலாக மேற்கண்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
