ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த இளம்பெண்ணுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் பிரித்தானியா
ஐ.எஸ்.ஐ.எஸ் வலையமைப்பில் இணைந்த இளம் பெண் சமீமா பேகம், தனது பிரித்தானிய குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கான மற்றொரு சட்ட முயற்சியிலும் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீர்ப்பினால் தற்போது 24 வயது நிறைந்த சமீமா பேகம் தொடர்ந்தும் சிரியாவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சமீமா பேகத்தின் குடியுரிமையை கடந்த 2019 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கம் மீளப்பெற்றிருந்தது.
பிரித்தானிய குருடியுரிமை
தனது, 15 ஆவது வயதில் அதாவது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சமீமா பேகம் லண்டனை விட்டு வெளியேறி சிரியாவுக்குச் சென்று அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டார்.
இந்நிலையில், அவர் மீண்டும் பிரித்தானிய குருடியுரிமையை கோரிய போது, மூன்று மேன்முறையீட்டு நீதியரசர்களின் தீர்ப்பும் ஒருமனதாக இருந்தது.
இதனால் மீண்டும் சமீமா பேகம் பிரித்தானிய உயர்நீதிமன்றில் இந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தியிருந்தார், இதற்கமைய வாதியின் சட்டத்தரணியான டேனியல் ஃபர்னர், "பேகத்துக்கு நீதி கிடைக்கும் வரை, பாதுகாப்பாக அவர் லண்டன் திரும்பும் வரை சட்டப்போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
இருந்தபோதிலும் நீதியரசர்கள், பேகத்தின் அனைத்து வாதங்களையும் முற்றிலுமாக நிராகரித்தமையானது, உயர்நீதிமன்றில் முழு முறையீட்டைப் பெறுவதற்கான அவரது திறனைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் பாதுகாப்பு
கடந்த ஆண்டு (2023) இடம்பெற்ற ஒரு விசாரணையில் தோல்வி ஏற்பட்டதை அடுத்தே பேகத்தின் சட்டத்தரணிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.
அவரது குடியுரிமையை அகற்றுவதற்கான உள்துறை அலுவலகத்தின் முடிவு சட்டவிரோதமானது என்று வாதிட்டனர்.
மேலும், நீதிமன்றத்தின் முடிவிற்கு பதிலளித்த பிரித்தானிய உள்துறை அலுவலகம், இங்கிலாந்தின் பாதுகாப்பை பராமரிப்பதே தமது முன்னுரிமை என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |