இலங்கையில் வலுப்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள்: பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு
வலுப்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள்
இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களும் , பாதுகாப்பு படையினரும் இந்த சந்தர்ப்பங்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹூல்டன் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரிக் அஹமட் ஆகியோர் டுவிட்டர் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள உயர்ஸ்தானிகர் சாரா ஹூல்டன் , '' இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை பிரித்தானிய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அமைதியான ஆர்ப்பாட்டமும் , கருத்து சுதந்திரமும் இலங்கையின் ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது. ' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை இது தொடர்பில் பிரித்தானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் , ''இலங்கையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமைதியான போராட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் தீர்வுகளை காண முடியும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் அமுலாகும் வகையில் கொழும்பின் சில காவல்துறை பிரிவுகளுக்கு காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து இலங்கைக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
