சிறிலங்காவில் பிரித்தானியாவின் புதிய திட்டம் - முக்கிய பேச்சுவார்த்தை!
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்கச் செயலாளர் ஜேம்ஸ் கிளேவர்லியை சந்தித்துள்ளார்.
22வது கொமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அலி சப்ரி லண்டன் சென்றுள்ளார். அதன் போதே பிரித்தானிய இராஜாங்க செயலருடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு சிறிலங்காவும் பிரித்தானியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பிரித்தானியாவின் புதிய திட்டம்
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை மற்றும் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் இச்சந்திப்பின் போது இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பூஜ்ஜிய வரித் திட்டம்
இதேவேளை இலங்கையில் புதிய வர்த்தக திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் 92% தயாரிப்புகளுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

