வடக்கு கிழக்கில் விகாரைகள் மீது கை வைப்போரின் தலை எடுக்கப்படுமாம் - பகிரங்க எச்சரிக்கை
வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள விகாரைகளில் கை வைப்போரின் தலையை எடுப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளமை தமிழ் தரப்பினரின் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேர்வின் சில்வாவின் இந்த உரையானது, இனங்களுக்கு இடையில் பதற்றத்தை தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ள விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாகவே வலம் வரும் மேர்வின் சில்வா, ஊடக நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியமை, அரச ஊழியரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியமை, முன்னேஸ்வரம் ஆலயத்துக்குள் புகுந்து வேள்வி பூஜையை தடுத்து நிறுத்தியமை என போன்ற அடவாடிகளில் ஈடுபட்ட ஒருவராக பலராலும் அறியப்படுகின்றார்.
பகிரங்க எச்சரிக்கை
ராஜபக்சக்களின் சகாவாக அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மேர்வின் சில்வா, 2015 அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் பொதுத்தேர்தலில் போட்டியிட எந்தவொரு கட்சியும் இடமளிக்காத நிலையில், அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்பட்டார்.
இந்த பின்னணியில் களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மேர்வின் சில்வா, வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள், எமக்கு இந்தப் பகுதி வேண்டும் எனக் கூறுகின்றனர். கிழக்கில் உள்ளவர்கள் எமக்கு இந்தப் பகுதி வேண்டும் எனக் கூறுகின்றனர்.தெற்கிலுள்ளவர்கள் எமக்கு இந்தப் பகுதி வேண்டும் என கூறுகின்றனர்.
இங்கு பகுதி பகுதியாக ஒன்றும் இல்லை. இது எமது தாய்நாடு. அதற்கான உறுதிப்பத்திரம் எம்மிடமே உள்ளது. நீங்கள் விரும்பினால் எங்களுடன் சமாதானமாக நல்லிணக்கத்துடன் வாழ முடியும்.
தலையை எடுத்துக்கொண்டுதான் வருவேன்
வடக்கிலுள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன். பிரபாகரனின் பகையை வைத்துக்கொள்ள வேண்டாம்.
அதிபருக்கு நான் மிகவும் மரியாதையுடன் ஒன்றைக் கூறுகின்றேன். இந்த நாட்டிலுள்ள வளங்களை புலம்பெயர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், வீதிக்கு இறங்குகள் என களனி மக்களுக்கு கூறுகின்றேன்.
இந்தக் கூட்டத்தின் பின்னர் நான் வடக்கு கிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகள் மீது கை வைக்க வந்தால், நீங்கள் மகாநாயக்கர்கள் மீது கை வைக்க வந்தால், நான் வெறுமனே களனிக்கு வர மாட்டேன்.
உங்களின் தலையை எடுத்துக்கொண்டுதான், களனிக்கு மீண்டும் வருவேன். எனக்கு பணியாற்றுவதற்கு அமைச்சுப் பதவிகள் தேவையில்லை” - என்றார்.
