வீடுகளை எரித்ததற்கு நீதி கிடைக்கவில்லை -ரணிலிடம் முறையிட்ட மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கடந்த வருடம் காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது தமது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை நீதி கிடைக்கவில்லை என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறையிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அதிபர் மாளிகையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூடிய போதே பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளது.
காவல்துறை வழங்கிய உறுதிமொழியால் வழக்கு வாபஸ்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாம் நீதிமன்றில் சமர்ப்பித்த வழக்கை அறியாமல் வாபஸ் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக காவல்துறையினர் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாகவும் ஆனால் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போராட்டகாரர்கள் மீது நடவடிக்கை இல்லை
அந்தத் தவறுகளைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்கு அவர்கள் ஆழ்ந்த வருத்தமும் தெரிவித்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் காமினி லாக்குகே, சாகர காரியவசம், டி.பி. ஹேரத் உள்ளிட்ட பலர் அரசாங்கக் கட்சிக் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.