தேர்தலுக்கு ஒதுக்கிய நிதி எங்கே - மீண்டும் புதிய வேட்புமனுக்கள் எடுக்கும் அபாயம் - ரோஹன பகிரங்கம்
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி, தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் தொகையை தேர்தலுக்காக விடுவிக்குமாறு, பாஃபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் பணத்தை விடுவிக்க நிதியமைச்சர் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாடாளுமன்றத்தின் நிதி பலத்தை அரசியல் தலைவர்களுக்கு மீண்டும் நினைவூட்டும் வகையில் தேர்தலுக்கு பெரும் தடையாக உள்ள நிதிப் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானம் எடுக்க வேண்டும்.
பாரதூரமான விடயம்
சமய விழாக்கள், சுதந்திர விழாக்கள் நடத்துவதன் நோக்கம் நாட்டின் நற்பெயரை உயர்த்துவது என அதிபர் கூறினாலும், மக்களின் வாக்குரிமையை நிராகரிக்கும் நாடு எவ்வாறு உலகத்தின் முன் தனது பிம்பத்தை உயர்த்துவது என்பதில் சிக்கல் இருக்கிறது.
மாகாணசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் மார்ச் 20ஆம் திகதியுடன் முடிவடைகிறது. மாகாண சபையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபரின் கையில் உண்டு.
அது ஒரு தனி நபரை மையமாகக் கொண்டது. இங்கு பாரதூரமான விடயம் என்னவெனில் உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டால் மீண்டும் புதிய வேட்புமனுக்கள் எடுக்கும் இடத்திற்கு அரசாங்கம் தள்ளப்படும். அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
எல்லை நிர்ணயம் முடிந்தவுடன் வேட்புமனுக்கள் கோரப்படும் இடத்திற்கு இதனை கொண்டு வர முடியும். மீளாய்வுக் குழுவினால் எல்லை நிர்ணய அறிக்கையுடன் மேலும் ஒத்திவைக்க முடியும். இவ்வாறான சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் இரண்டு ஆண்டுகள் தாமதமாக இடம்பெறும் அபாயம் உள்ளது.” என தெரிவித்தார்.
