41 ஆண்டுகளுக்கு பின் தென்னிலங்கையில் வெளிப்பட்ட கழிவிரக்கம்
கொழும்பு போராட்டகளத்தில் யாழ். நூலக எரிப்புக்கு நினைவு கூரல்
தமிழர் தாயகத்தின் பெருமையாக நிமிர்ந்து நின்ற யாழ். பொது நூலகம் சிறிலங்கா அரச தரப்பு காடையர்களால் எரிக்கப்பட்ட வரலாற்று துன்பியல் இடம்பெற்று இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதற்தடவையாக தென்னிலங்கையில் கழிவிரக்க நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டக்களத்திலும் இன்று இடம்பெற்றுள்ளது.
போராட்டக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு முன்னால் இந்த நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதுடன், மனிதாபிமானத்திற்கு எதிராக வடக்கிலும் தெற்கிலும் மேற்கொள்ளப்படும் அரச ஒடுக்குமுறைகள் மற்றும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மணிவண்ணன் உரை
இந்த நிலையில் சிறிலங்காவில் ஆட்சி மாற்றமொன்று அவசியம் என வலியுறுத்தி தென்னிலங்கையில் போராட்டம் நடத்தி வரும் சகலரும் யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்பு சம்பவத்தை நினைத்து வெட்கித் தலை குனிய வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த நூற்றாண்டின் அவமானமே இந்த யாழ். பொது நூலக எரிப்புச் சம்பவம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
