பேருந்துக் கட்டணம் குறித்து வெளியான தகவல்
நாட்டில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்துக்கான பயணக் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பேருந்து கட்டணங்களில் குறைப்பு ஏற்படுத்தப்படவேண்டுமானால், எரிபொருள் விலை திருத்தத்தில் டீசல் விலை குறைந்தபட்சம் 4 சதவீதத்தினால் குறைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எனினும், தற்போதைய விலை திருத்தமானது 1.58 சதவீத குறைப்பை மாத்திரம் பிரதிபலிக்கிறது எனவும் பேருந்துப் பயணக் கட்டணத் திருத்தத்திற்கு வழிவகுக்கவில்லை என்று அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலை திருத்தம்
நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய டீசல் விலை 6 ரூபாயால் குறைக்கப்பட்டு, புதிய விலை 277 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 6 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 335 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 05 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.
இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
