குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வர்த்தகரின் சடலம் : மேலும் இருவர் கைது
புத்தளம் - வென்னப்புவ பகுதியில் வர்த்தகர் ஒருவரை கொலைசெய்து, சடலத்தை வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் குப்பை குழியில் வீசிய சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் வென்னப்புவை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 15 வயதுடைய சகோதரர்கள் இருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “புத்தளம் - மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வென்னப்புவை காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கார்
இது தொடர்பில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன வர்த்தகரின் கார் வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள அவரது 20 வயதுடைய நண்பனின் வீட்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை (03) கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்த கைதுசெய்யப்பட்ட வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு வர்த்தகரும் அவரது 5 நண்பர்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது வர்த்தகருக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் வர்த்தகர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
பின்னர் நண்பர்கள் அனைவரும் இணைந்து வர்த்தகரின் சடலத்தை வென்னப்புவை, சிறிகம்பொல பிரதேசத்தில் உள்ள வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் குப்பை குழியில் வீசியதாக வர்த்தகரின் நண்பன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் புத்தளத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் வென்னப்புவை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
