ஜீவன், நாமல் உள்ளிட்ட 12 பேருக்கு அமைச்சு பதவி - வெளியான விபரம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் மேலும் சிலருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரச உயர் மட்டத்தை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, புதிதாக மேலும் 12 அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய புதிய அமைச்சர்களில் 10 பேர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பொதுஜன பெரமுன
சிறிலங்கா பொதுஜன பெரமுன நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, ஜனக பண்டார தென்னக்கோன், எஸ்.பி.திஸாநாயக்க, விமல வீர திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்குமாறு முன்மொழிந்துள்ளது.
வேறு கட்சி
ஏனைய கட்சிகளில் இருந்து ஜீவன் தொண்டமான் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா (தேசிய காங்கிரஸ்) ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.
அத்தோடு, நேற்று முன்தினம் 37 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

