கனடாவில் பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
கனடாவில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டமொன்றை முன்னெடுக்கவிருந்த நிலையில் ஊதிய உயர்வை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.இதனால் அந்த வேலை நிறுத்தப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்திற்கும், தொழிற்சங்க ஊழியர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு வழங்கப்படும்
தொழிற்சங்கத்தின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெஸ் (Stephen Lecce) தெரிவித்தார்.
இந்நிலையில் தொழிற்சங்கத்திற்கும் ஒன்டாரியோ அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட இணக்கத்தை அடுத்து வேலைநிறுத்த போராட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் எட்டப்பட்ட ஒப்பந்தம்
CUPE எனப்படும் கனடிய பொது ஊழியர் சங்கத்திற்கும், Ontario மாகாண அரசுக்கும் இடையே வார இறுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. மொத்தம் 171 நாட்களாக இரு தரப்பினரும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஒப்பந்தம் CUPE உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதற்கான வாக்கெடுப்பு நாளை ஆரம்பமாகி வார இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
