கனடா செல்ல ஆசைப்பட்ட யாழ்.இளைஞன்! விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது
போலி கனேடிய கடவுச்சீட்டில் கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 24 வயதுடைய இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றதாக விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த நபர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் கட்டாரின் டோஹா நோக்கிச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
போலியான கடவுச்சீட்டு
விமான உள்நுழைவு அனுமதியின் போது அவர் வழங்கிய கனேடிய கடவுச்சீட்டில் சந்தேகம் எழுந்ததால், விமான அதிகாரிகள் அவரை விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு மேலதிக விசாரணைக்காக பரிந்துரைத்தனர். அவரின் கடவுச்சீட்டு போலியானது என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த நபரின் உண்மையான இலங்கை கடவுச்சீட்டும் அவரிடம் காணப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான விமான பயணசீட்டையும் அவரிடமிருந்து கண்டெடுத்ததாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முதலில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் கவுன்டர்களில் போலி கனேடிய கடவுச்சீட்டை சமர்ப்பித்து டோஹா சென்று அங்கிருந்து கனடா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு அதன் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் மாலைதீவு செல்வதாக கூறியுள்ளார்.
40 இலட்சம்
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், கனடாவில் உள்ள மாமா ஒருவர் அவருக்கு ஆதரவு அளித்து உதவியதாகவும், இலங்கையில் உள்ள தரகர் ஒருவருக்கு 40 இலட்சத்தை கொடுத்து இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் தெரியவந்தது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இளைஞனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |