கனடாவில் ஆரம்பமான உலகத் தமிழ் ஆய்வு மாநாடு
ஹஸ்பர் ஏ.எச்
கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட 'அனைத்துலக தமிழர் பேரவை' நடத்தும் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொராண்டோ ஸ்கார்ப்ரோ நகரில் உள்ள சென்டானியல் கல்லூரியின் ஈவென்ட் சென்டரில் தமிழர்களின் பாரம்பரிய பறை இசை முழங்க நேற்று (15) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் பல நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், கற்றறிந்தவர்கள், கனடாவின் மத்திய, மாகாண, மாநகர சபை மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மொழிப்பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கட்டுரைகள்
மாநாட்டில் படைக்கப்படுவதற்காக 500க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நான்கு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, தமிழ் மரபு சார்ந்த விடயங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெறுவதோடு, இன்றைய உலகின் புதிய ஊடகமான செய்யறிவின் துணையோடு எப்படி மேம்படுத்துவது, எப்படி அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது என்பது குறித்த ஆய்வுகள் இடம்பெறும் என்று மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் பெ. இராஜேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.