ட்ரம்ப்பின் வரி விதிப்பால் கனடாவிற்கு விழுந்த பலத்த அடி!
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கனடாவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முழுநேர வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன.
இது பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்திற்குப் பெரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தொழிலாளர் புள்ளிவிவரங்களின்படி, அந்நாட்டின் வேலையின்மை வீதம் 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், இது ஜி7 நாடுகளில் பிரான்சுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக உயர்ந்த அளவாகப் பதிவாகியுள்ளது.
மோசமான வேலைவாய்ப்பு
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த மிக மோசமான வேலைவாய்ப்புச் சரிவினால் குறிப்பாக மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளே மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவின் வாகன உற்பத்தி, உருக்கு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் மீது விதித்துள்ள புதிய வரிகளே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகின்றது.
அத்துடன், அமெரிக்கா-கனடா-மெக்சிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு மறுஆய்வுக்கு உள்ளாகவுள்ள நிலையில், நிலவும் நிச்சயமற்ற தன்மை முதலீடுகளை முடக்கியுள்ளது.
மொத்த ஏற்றுமதி
கனடாவின் மொத்த ஏற்றுமதியில் 67 சதவீதம் அமெரிக்காவையே சார்ந்துள்ளதால் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகத் தடைகள் கனடியப் பொருளாதாரத்தை மிக எளிதில் பாதிக்கக்கூடிய நிலைக்குத் தள்ளியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பிரதமர் கார்னியின் தவறான நிர்வாகமே இந்த நிலைக்குக் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொயிலியேவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அவர் விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |