வெளிநாட்டு மாணவர்களின் வெளியேற்றம் தொடர்பில் கனடா அமைச்சரின் தகவல்
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கனடாவில் கல்வி கற்று வருகின்றனர்.
பட்டப்படிப்பை முடித்த பிறகு கனடாவில் குடியேற விண்ணப்பித்தும் வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து கனடாவிற்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதற்காக மாணவர்களின் ஆவணங்கள் பரிசீலிக்கப்படும்போது பெரும்பாலான மாணவர்களுடைய ஆவணங்கள் போலியானவை எனத் தெரியவந்துள்ளது.
மாணவர்களின் நிலை
போலியான தகவல்களை அளித்து கனடா வந்துள்ள மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என கனடா அரசு அறிவித்துள்ளது எனும் தகவல் பரவி வருகிறது.
இதனால் அங்குள்ள பல மாணவர்களின் நிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் இந்திய அரசு மாணவர்கள் தொடர்ந்து கற்றலில் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கனடா
இந்த நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி உண்மையல்ல என கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சீன் பிராசர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,
"வெளிநாட்டு மாணவர்கள் போலி ஆவணம் தாக்கல் செய்ததில் தொடர்புபடவில்லை என்றால் அவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள்.
தனிப்பட்ட ஒரு மாணவரை எடுத்துக் கொண்டால், அவர் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கனடா வந்து, அவருடைய விண்ணப்பம் போலியானது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றால், தற்காலிகமாக அவரை தங்க வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இது சிறந்த நோக்கத்தோடு வந்துள்ள சர்வதேச மாணவர்கள், பட்டதாரிகள் கனடாவில் தங்கியிருக்க உறுதி செய்யும்." எனத் தெரிவித்துள்ளார்.
