கனடிய தமிழ் பேரவை மட்டு வைத்தியசாலைக்கு வழங்கியுள்ள பாரிய உதவித்திட்டம்..!
கனேடியத் தமிழர்களால் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கனேடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress - CTC) ஒழுங்கு செய்யப்பட்ட நிதிசேர் நடையூடாக திரட்டப்பட்ட நிதியின் இரண்டாவது நன்கொடையாக இது வழங்கப்பட்டுள்ளது.
கனேடியத் தமிழர் பேரவை தமது வருடாந்த நிதிசேர் நடையூடாக வருடந்தோறும் பல்வேறு சமூக ரீதியிலான நன்கொடைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்கொடைத் தொகுதி
கடந்த ஆண்டு இதன் முதலாவது நன்கொடைத் தொகுதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் உயிர் காக்கும் மருந்துகளுக்கான பற்றாக்குறையை நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் அதிகளவில் முகங்கொடுத்துள்ளன.
கனடிய தமிழர்களால் திரட்டப்படும் நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்தி மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் வழங்குவதெனத் திட்டமிடப்பட்டது.
இதன் இரு கட்டங்கள் தற்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன, இதன் இரண்டாம் தொகுதி மருந்துப் பொருட்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இயக்குனர் மருத்துவர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த மருந்து பொறுப்பேற்றல் நிகழ்வில் கனேடியத் தமிழர் பேரவையின் பிரதிநிதி மற்றும் மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் இதுரைரத்தினம் துசியந்தன், புற்றுநோய் நிபுணர் மருத்துவர் இக்பால், நோயியல் நிபுணர் மருத்துவர் அகிலன் சின்னத்துரை மற்றும் பல மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனை நிர்வாக பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
