நத்தார், புது வருடத்தை முன்னிட்டு பிரிட்டனில் பொது முடக்கம்? தீவிரமாக ஆராயும் பொறிஸ் ஜோன்ஸன்
ஒமிக்ரோன் (Omicron) பரவலால் கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி, மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவிக்க இங்கிலாந்து பிரதமர் பொறிஸ் ஜோன்சன்(Boriss Johnson) திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் ஒமிக்ரோன் (Omicron) தொற்று அதிகரித்து வருவதால், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை இரத்து செய்யலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அறிவுரை வழங்கியுள்ளது.
ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், டெல்டா வகையை விட ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவுவதற்கு ஆய்வுச்சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறினார். மேலும், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கும் ஒமிக்ரோன் பரவுவதாகவும் அதானோம் தெரிவித்தார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்க அந்நாட்டு பிரதமர் பொறிஸ் ஜோன்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் கொரோனா அலை மீண்டும் வேகமெடுத்துள்ளதால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய அவர், கொரோனா பரவல் நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், அதனை சமாளிக்க அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.