புற்றுநோய் சர்ச்சை தேங்காய் எண்ணெய் விவகாரம் - நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறிய பொலிஸார்
புற்றுநோய் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேங்காய் எண்ணெய் தொடர்பில் கைப்பற்றப்பட்ட இரண்டு பவுசர்களையும் நீதிமன்ற உத்தரவை மீறி சுங்கத்திணைக்களத்திடம் பொலிஸார் கையளித்தமை தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு மாரவில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 29 ஆம் திகதி இரவு தங்கொட்டுவ பிரதேசத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான இரு தேங்காய் எண்ணெய் பவுசர்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றை பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இது தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸார் கடந்த 30 ஆம் திகதி மாரவில நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டிருந்தனர்.
இதன்போது இரு பவுசர்களையும் நீதிமன்ற பாதுகாப்பில் வைத்து இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று (31) இரு பவுசர்களையும் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்த மனு நேற்று பிற்பகல் மாரவில நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் ரபித்த அபேசிங்க,கொள்கலன்கள் குறித்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொண்டீர்களா? என தங்கொட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த அவர், இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் இரு பவுசர்களையும் சுங்க திணைக்களத்திடம் ஒப்படைத்தாகவும் பதிலளித்தார்.
இதன்போது ஏன் நீதிமன்ற உத்தரவை செயற்படுத்தவில்லை என வினவிய நீதவான் சுங்கத்தால் பாதுகாத்து பராமரிக்க முடியாத பொருளை மீண்டும் சுங்கத் திணைக்களத்திற்கே பாரப்படுத்தியமை தவறு என கூறியுள்ளார்.
எனவே, இரு கொள்கலன்கள் தொடர்பில் மீண்டும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்று வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் அறிக்கையை ஏப்ரல் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 4 மணி நேரம் முன்
