இலங்கையின் கடனை செலுத்தி முடிக்க கஞ்சா செய்கை -தயாராகும் சட்ட ஏற்பாடுகள்
கஞ்சா செய்கை மற்றும் ஏற்றுமதியின் ஊடாக நாட்டின் கடனை செலுத்தி முடிக்கலாம் என்றும் பில்லியன் கணக்கில் இலங்கைக்கு லாபம் ஏற்படும் எனவும் அந்த வகையில் நாட்டில் கஞ்சா செய்கையில் ஈடுபடவும் ஏற்றுமதி செய்யவும் தேவையான சட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வௌியிட்டுள்ள அவர், இவ்விடயம் குறித்து இலங்கையில் உள்ள உயர் ஆயுர்வேத வைத்தியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
கஞ்சாவை போதைப் பொருள் தேவைக்காக செய்கையிட்டால் மாத்திரமே நமக்கு பிரச்சினை எனவும் ஏற்றுமதி நோக்கில் செய்கையிட்டால் பிரச்சினை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் 50ற்கும் மேற்பட்ட நாடுகள் கஞ்சா செய்கையில் ஈடுபடுவதாகவும் ஆயுர்வேத மருந்துக்கு அது பயன்படுத்தப்படுவதாகவும் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் செயற்படுத்தப்பட்ட பின் அதன் நன்மைகள் வந்தடையும் போது திட்டம் குறித்த பிழையான விமர்சனம் இல்லாது போகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.