முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (20) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
இதனையடுத்து, வழக்கை மீண்டும் ஜனவரி 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டார்.

சுற்றுலாத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சுற்றுலா அதிகார சபை உள்ளிட்ட நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு காப்புறுதித் திட்டங்களை வழங்கியதில் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில், பிரசன்ன ரணதுங்கவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |