RTI ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்
தகவல் அறியும் உரிமைக்கான (RTI) ஆணைக்குழுவின் தீர்மானத்தினை முன்னிலைப்படுத்த காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்மேளனம் சார்பில் அதன் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியாக செயற்பட்ட முன்னாள் தலைவர் ரவூப் ஏ.மஜீத் மற்றும் தகவல் அதிகாரியாக செயற்பட்ட முன்னாள் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் (நளீமி) ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கர்பலா நகரினைச் சேர்ந்த ஏ.எல்.எம். றிசான் என்பவரினால் காத்தான்குடி சம்மேளனத்திற்கு 2018.09.19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கை தொடர்பிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரொட்டரி கழகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறை அமைச்சு, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகம் ஆகியவற்றின் சிபாரிசின் ஊடாக இந்த வீட்டுத் திட்டத்திற்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வீட்டுத் திட்டத்திலுள்ள ஏ.பீ. சித்தி பலீலாவிற்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டமை தொடர்பிலும் இந்த வீட்டுத் திட்ட காணி தொடர்பிலும் அது தொடர்பில் இணக்க சபையில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பிலும் ஆறு கேள்விகளை உள்ளிடக்கிய தகவல் கோரிக்கையொன்று றிசானினால் சம்மேளனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சம்மேளனத்தின் தகவல் அதிகாரியினால் எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை இதனையடுத்து சம்மேளனத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரி சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டுக்கும் எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் கடந்த 2018.11.26 ஆம் திகதி குறித்த விடயம் தொடர்பாக ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது, இது தொடர்பான விசாரணைகள் 2020.06.29 மற்றும் 2022.01.10 ஆகிய திகதிகளில் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, இந்த மேன்முறையீடு தொடர்பாக 2019.09.15 மற்றும் 2020.07.21 ஆகிய தினங்களில் சம்மேளனத்தினால் எழுத்து மூல சமர்ப்பணங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் 2022.01.14 ஆம் திகதி இந்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது, 2016ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் உரிமைச் சட்டத்தின் 43 (i) பிரிவின் கீழ் காத்தான்குடி சம்மேளனம் பகிரங்க அதிகார சபை என 2022.01.10 மற்றும் 2020.06.29 ஆகிய திகதிகளில் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நாடப்படும் தகவல் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவையுடன் தொடர்புறும் அந்தளவிற்கு பொதுமக்களுக்கு சேவையை வழங்குகின்ற அரசாங்கத்தினால் அல்லது ஏதேனும் திணைக்களத்தினால் பொருளளவில் நிதியளிக்கப்படுகின்ற அரசசார்பற்ற ஒழுங்கமைப்புகள் அல்லது மாகாண சபையொன்றினால் அல்லது வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றினால் அல்லது சர்வதேச ஒழுங்கமைப்பினால் தாபிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட வேறு அதிகாரசபை ஒரு பகிரங்க அதிகார சபை என மேற்படி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிப்பதற்காக ரோட்டரிக் கழகத்திடமிருந்து சம்மேளனம் நிதியுதவி பெற்றுள்ளமை மற்றும் ஆதம்பாவா சித்தி பலீலவுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான சிபாரிசு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் அமைச்சு ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆகியவற்றினைக் கொண்டே காத்தான்குடி சம்மேளனம் பகிரங்க அதிகார சபை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேன்முறையீட்டாளரால் கோரப்பட்ட விடயங்கள் தகவலறியும் சட்டத்தின் பிரிவு 5 இன் அடிப்படையில் விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் ஆணைக்குழு தீர்மானித்தது.
இதனால் பகிரங்க அதிகார சபையிடம் கோரப்பட்ட தகவலை மேன்முறையீட்டாளருக்கு 2023.02.24ஆம் திகதி முன்னர் ஆணைக்குழுவிற்கு பிரதியிட்டு வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இந்த தீர்ப்பின் பிரகாரம் குறித்த தகவல் கோரிக்கைக்கு பதில் கிடைக்கப் பெறாத பட்டசத்தில் அல்லது வுழங்கப்பட்ட தகவலில் திருப்தி இல்லாவிடின் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறும் அதன் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட காலப் பகுதிக்குள் காத்தான்குடி சம்மேளனத்தினால் பதில் வழங்கப்படவில்லை இது தொடர்பில் மேன்முறையீட்டாளரினால் ஆணைக்குழுவிற்கு கடந்த 2022.06.15 ஆம் திகதி அறிவிக்கப்பட்டு சத்தியக்காடதாசியும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த மேன் முறையீட்டுக்கான இணக்கமின்மை தொடர்பான முதலாவது விசாரணைகள் 2023.10.27ஆம் திகதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை இதனால் குறித்த விசாரணைகள் 2023.12.20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது, இந்தத் திகதியில் பங்கேற்க முடியாமையினால் மற்றுமொரு திகதியினை வழங்குமாறு ஆணைக்குழுவிடம் சபீலினால் மின்னஞ்சல் ஊடாக கோரப்பட்டது.
இதற்கமைய, குறித்த விசாரணைகள் 2024.02.22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது அதிலும் காத்தான்குடி சம்மேளன பிரதிகள் பங்கேற்காமையினால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 39ஆவது பிரிவின் கீழ் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர ஆணைக்குழு தீர்மானித்தது.
இந்த வழக்கு 2024.06.24 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது இதனையடுத்து ரவூப் ஏ. மஜீத் மற்றும் அஷ்ஷெய்க் சபீல் ஆகியோரை 2024.09.13 ஆம் திகதி மன்றில் முன்னலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
குறித்த உத்தரவிற்கமைய மேற்படி இருவரும் மன்றில் முன்னிலையான போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கடந்த நவம்பர் 4 மற்றும் டிசம்பர் 16 ஆகிய திகதிகளிலும் இந்த வழங்கு தொடர்பான விசாரணைகள் மன்றில் இடம்பெற்றுள்ளன.
மேன்முறையீட்டாளரினால் கோரப்பட்ட தகவல்களை காத்தான்குடி சம்மேளனத்தினால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள விடயம் இறுதி விசாரணையின் போது மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு பிரதியிடப்பட்டு வழங்கப்படுகின்ற இந்த பதிலில் மேன்முறையீட்டாளர் திருப்தி அடையும் பட்சத்தில் குறித்த வழக்கினை அடுத்த விசாரணையின் போது முடிவுக்கு கொண்டுவர கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி மன்றில் இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 09 January, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.