சொகுசு வாகன இறக்குமதி வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைக்கு 1,728 BMW சொகுசு வாகனங்களை வரியில்லா அனுமதிப்பத்திரத்தின் கீழ் இறக்குமதி செய்த போது அரசாங்கத்திற்கு 16 பில்லியன் ரூபா வரி இழப்பு ஏற்பட்டமை தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ள சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனம், விசாரணையை இடைநிறுத்த உத்தரவு கோரி தாக்கல் செய்த மனுவுடன் தொடர்புடைய வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தனியார் நிறுவனம் 2011 மற்றும் 2014இற்கு இடையில் 1,728 சொகுசு BMW வாகனங்களை வரியின்றி இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளதாக 2016 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகம் வெளிப்படுத்தியிருந்தார்.
16 பில்லியன் ரூபா வரி இழப்பு
இந்த வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 16 பில்லியன் ரூபா வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, இலங்கை சுங்கப் பிரிவினர் விசாரணை நடத்தி வாகனம் ஒன்றிற்கு 100,000 ரூபா அபராதமாக வசூலிக்க நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர், இலங்கை சுங்கம் விடுத்த வேண்டுகோளின் பேரில், குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான அறிக்கையை ஜேர்மன் சுங்க அதிகாரிகளிடம் கோரியதுடன், அதன் அடிப்படையில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது, வாகனங்களை இறக்குமதி செய்த தனியார் நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணையை நிறுத்தி உத்தரவொன்றை பெற்றிருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் அழைக்கப்பட்டபோது, மனுவில் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி
வாகன இறக்குமதியின் போது உரிமம் பெற்ற நிறுவனமோ அல்லது தரப்பினரோ தவறான தகவல்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதால், முறையான விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க சுங்க கட்டளைச் சட்டத்திற்கு அதிகாரம் உள்ளது என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மனுதாரர் நிறுவனம் மோசடியாக செயற்பட்டதை சாட்சிகள் ஊடாக தெளிவாவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேற்படி சமர்ப்பணங்கள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்த நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை இரத்துச் செய்து, கட்டணங்களுக்கு உட்பட்டு நிறுவனத்தின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
இதன்படி, வாகன இறக்குமதி சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |