ஊழியர் சேமலாப நிதிய சட்டதிருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான நடைமுறை சட்டதிருத்தத்தின் பின்னர் அப்பணிகள் பிறிதொரு கட்டமைப்புக்கு மாற்றப்படவேண்டியிருப்பதாக மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள் 1200 பேரில் சுமார் 300 பேர் ஊழியர் சேமலாப நிதியத்துடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருத்தமற்ற முதலீடுகள்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் "மொத்தமாக 1200 மத்திய வங்கி ஊழியர்களில் நிரந்தர ஊழியர்கள் 150 பேர் உள்ளடங்கலாக சுமார் 300 பேர் ஊழியர் சேமலாப நிதியம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் மத்திய வங்கியினால் இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நான் கருதவில்லை.
கடந்த காலங்களில் பங்குகள் மற்றும் பிணைமுறிகளில் மேற்கொள்ளப்பட்ட பொருத்தமற்ற முதலீடுகள் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் நிர்வாக செயற்பாடுகள் கேள்விக்கு உள்ளாகின.
இந்த நிதியத்தின் நிர்வாகம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டன. தனியார்துறை சார்ந்த மிகப்பெரிய நிதியம் இதுவாகும். நானறிந்த வரையில் இந்நிதியம் சுமார் 10 மில்லியன் கணக்குகளைக் கொண்டிருக்கிறது.
பிரத்தியேக கட்டமைப்பொன்றை நிறுவுதல்
இருப்பினும் ஊழியர் சேமலாப நிதியம் மத்திய வங்கியின் ஊடாக நிர்வகிக்கப்படுவதில் காணப்படும் கொள்கை மற்றும் செயற்பாட்டு ரீதியான சிக்கல்களைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், இதன் நிர்வாகத்துக்கென பிறிதொரு கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படவேண்டியது அவசியம்.
ஆனால், அத்தகையதொரு கட்டமைப்பை உருவாக்குகையில், அதன் நிர்வாகத்தை உரியவாறு முன்னெடுக்கக்கூடிய, பொறுப்புக்கூறத்தக்க வலுவான கட்டமைப்பாக அது காணப்படுமா என்ற கேள்வி நிலவுகின்றது.
எனவே ஊழியர் சேமலாப நிதியத்தை மாத்திரமன்றி, இதைப் போன்று முறையாக நிர்வகிக்கப்படாத ஏனைய நிதியங்களை நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் பிரத்தியேக கட்டமைப்பொன்றை நிறுவவேண்டும் எனவும்“ மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |