சற்று முன்னர் ஆரம்பமான தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்
புதிய இணைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் காரியாலயத்தில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் பதில் தலைவர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
செய்திகள் : வ.சக்திவேல்
முதலாம் இணைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் (16.02.2025) இடம்பெறவுள்ளது.
குறித்த கூட்டம் மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் காலை பத்துமணியளவில் நடைபெறவுள்ளது.
கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின்போது முதலில் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்படவுள்ளது.
தேசிய மாநாடு
குறிப்பாக, வழக்குகளை விரைந்து இணக்கத்துடன் முடித்து வைப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்கு முன்னதாக நடைபெற்ற நிருவாகத்தெரிவுக்கு எதிராக திருகோணமலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜுன் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் அடுத்தவிடயமாக, புதிய யாப்புருவாக்கச் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான கோரிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள கோரிக்கைக்கு இறுதியான பதிலளிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல்
அதற்கடுத்தபடியாக, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தனித்து களமிறங்குவது, அதில் காணப்படுகின்ற சாதகமான, பாதமாக நிலைமைகள் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக கடந்த 8ஆம் திகதி மேற்படி நிகழச்சி நிரலுடன் மத்திய குழுக் கூட்டத்துக்கு திகதியிடப்பட்டிருந்தபோதும், கட்சியின் அரசியல்குழுவின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரணத்தினை அடுத்து அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




