திருகோணமலையில் இடைநிறுத்தப்பட்ட மாணவிகளின் பெறுபேறுகள்: மாவட்ட எம்.பி கண்டனம்
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறு இடைநிறுத்தமானது இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் இன்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர் மேலும் கூறியதாவது, “பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே இந்த இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது.
இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு
காதுகளை மூடி பரீட்சை எழுதியமை பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அது ஏனைய பரீட்சார்த்திகளை பாதிக்கின்ற விடயமும் அல்ல.
இந்த விடயங்களை சகல தரப்பினருக்கும் தெளிவு படுத்திய பின்னரும் பெறுபேறு இடைநிறுத்த பட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
சாஹிரா கல்லூரியின் வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களின் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு இதுவென்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
சமூகப் பிரச்சினை
பரீட்சை மண்டபத்தில் தீர்க்கப் பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளரின் மனநிலையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஒரேமொழியை பேசும் நாம் இப்படி பிள்ளைகளின் உரிமைகளில் கைவைப்பது ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற் றோரினதும் இன்றைய சோகமான மனநிலையை சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது குறித்து இன்று பரீட்சை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன், இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை. கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் மற்றொரு வடிவம் இது.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |