போக்குவரத்துசபை ஊழியர்களின் போராட்டம்: சிரமத்துக்கு உள்ளாகும் மக்கள் (படங்கள்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இன்று(20) இரண்டாவது நாளாகவும் குறித்த பணி பகிஸ்கரிப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊழியர்களின் போராட்டம்
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை டிப்போ ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய டிப்போ ஊழியர்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் காவல்துறையினரின் அசமந்த போக்குடன் செயற்படுவதன் காரணமாகவே தமது பணி பகிஸ்கரிப்பு போராட்டம் தொடருவதாகவும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தால் தாங்கள் போராடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.
பாடசாலைசெல்லும் மாணவர்கள்
தாக்குதல்தாரிகள் கைதுசெய்யப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என இலங்கை போக்குவரத்துச்சபையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதேநேரம் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களின் போராட்டம் காரணமாக மட்டக்களப்பின் இலங்கை போக்குவரத்துசபை பேருந்துகளின் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக பாடசாலைசெல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |