எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அழுத்தம் வழங்கியதா அயல்நாடு?
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்தமைக்கு இந்தியா விடுத்த அழுத்தம் காரணமென கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அண்மையில் லங்கா ஐ ஓ சி நிறுவனம் எரிபொருள் விலையை பாரியளவில் அதிகரித்த போதிலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவில்லை.
அத்துடன் நட்டமடைந்தாலும் எரிபொருள் விலை அதிகரிப்பை மேற்கொள்ளமாட்டோம் என புதிய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் லங்கா IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்த நிலையில், IOC நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பெருமளவிலானோர் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே கடந்த இரு தினங்களாக எரிபொருள் நிரப்பினர்.
இவ்வாறான நிலையிலேயே, தற்போது சிபெட்கோ நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
இந்தியாவினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியதாக நிதி அமைச்சின் உயர் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.