சந்திரிக்காவின் அதிரடியால் கொழும்பில் சூடு பிடிக்கும் அரசியல் களம்
அரசியலில் களமிறங்கும் விமுக்தி குமாரதுங்க
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலில் களமிறங்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, இன்று (10) இதுகுறித்து தனது ஊகத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தன்னால் கணிக்க முடியாது எனவும் ஆனால் விமுக்தியை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு கலந்துரையாடலும் தற்போது நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது மகன் அரசியலுக்கு வருவதை முன்னர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் புதிய சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தை அண்மையில் சந்திரிக்கா திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே குமார வெல்கம தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னாள் அதிபர் திருமதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் தொகுதி அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
திருமதி சந்திரிகா குமாரதுங்க கம்பஹா மாவட்டத்தின் தலைவராகவும், ஜீவன் குமாரதுங்க கொழும்பு மாவட்டத்தின் தலைவராகவும், குமார வெல்கம களுத்துறை மாவட்டத்தின் தலைவராகவும் முன்னாள் அதிபரின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராக நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் குமார வெல்கம தெரிவித்தார்.
இதுதவிர பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சியில் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

