ஆசிய பிராந்தியத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்
ஆசிய பிராந்தியத்தில் இலங்கையை(sri lanka) தூய்மையான நாடாக மாற்றுவதற்கு உழைத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்தார்.
ஹோமாகம பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
“சுத்தமான இலங்கை”
புதிய திட்டமாக “சுத்தமான இலங்கை” என்ற திட்டத்தை ஆரம்பிக்கிறோம். சுற்றாடல் ரீதியாக தூய்மையான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்திட்டத்திற்காக விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு, தூய்மையான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும், இந்நாட்டில் பங்களிக்கக்கூடிய சகலரும், அதற்குப் பங்களிக்கக்கூடிய நிதியத்தை உருவாக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இடமும் தூய்மை
ஆறு, கால்வாய், கடற்கரை, சாலை, அவென்யூ உட்பட ஒவ்வொரு இடமும் தூய்மைப்படுத்தப்படுகிறது. ஆசிய பிராந்தியத்தில் இலங்கையை தூய்மையான நாடாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம்.
தூய்மையான கழிப்பறை, சுத்தமான பேருந்து நிலையம், தூய்மையான தொடருந்து நிலையம், தூய்மையான தொடருந்து, சுத்தமான பேருந்து, குடிமக்கள் அன்பாகவும் புன்னகையுடனும் நல்ல வரவேற்புடனும் நடத்தப்படும் சமுதாயத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
"சுத்தமான இலங்கை" திட்டமானது சுற்றுப்புறச் சூழல் மட்டுமன்றி அனைத்துத் தரப்பிலிருந்தும் தூய்மையான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் புதிய வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டு அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கு மேலதிக கொடுப்பனவை வழங்கவும் கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“டிசம்பர் மாதத்துக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை நாடாளுமன்ற முறைப்படி சமர்ப்பிக்க முடியாது. எனவே, நாங்கள் டிசம்பரில் இடைக்கால நிலையான கணக்கை முன்வைப்போம். மார்ச் மாதத்துக்கு முன் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
அந்த வரவு செலவுத் திட்ட ஆவணத்தில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |