இந்தியாவில் மாற்றம் காண்கிறது கேரள மாநிலத்தின் பெயர்
கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான அம்மாநில அரசின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று (பெப்ப். 24) ஒப்புதல் அளித்துள்ளது.
பெயரை மாற்றக்கோரி மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(24) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 3-ன் படி, மாநிலத்தின் பெயரை மாற்றக்கோரி கேரள மாநில சட்டப்பேரவையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்றக் கோரி 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அம்மாநில சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெயர் மாற்றம்
ஆனால் இத்தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு உரிய திருத்தங்களுடன் மற்றொரு தீர்மானம், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது கேரள மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெயர் மாற்றத்திற்கான சட்டமூலத்திற்குமத்திய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |