அரச ஊழியர்களின் ஓய்வூதிய விதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்
2016 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் பணியமர்த்தப்பட்ட அரச அலுவலர்களின் நியமனக் கடிதங்களில் உள்ள ஓய்வூதிய உரித்து தொடர்பான விதிகளைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச அலுவலர்களுக்கு மிகவும் பொருத்தமான பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகம் செய்தல் தொடர்பான 2016 வரவுசெலவு திட்ட முன்மொழிவுக்கமைய 2016.01.01 திகதியின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச அலுவலர்களின் நியமன கடிதங்களில் 'இந்நியமனம் ஓய்வூதியத்துடன் கூடியதாகும்.
ஊழியர்களுக்கு உரித்தான ஓய்வூதிய முறை தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு இணங்கியொழுக வேண்டும்' எனும் ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது.
நிபந்தனை திருத்தம்
இருப்பினும், 2016.01.01 திகதியின் பின்னர் அரச சேவைக்கு நியமனம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய முறை இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பதுடன், தற்போதுள்ள ஓய்வூதிய முறைக்கான அவர்களது உரித்தை உறுதி செய்து குறித்த நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான நிபந்தனை திருத்தம் செய்வதற்காக 2026 வரவுசெலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2016.01.01 திகதியின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து அரச அலுவலர்களின் நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான ஏற்பாட்டை 'இந்நியமனம் ஓய்வூதியம் உள்ளதாகும்.
விதவைகள்/ தபுதாரர் ஓய்வூதிய முறைக்கு பங்களிப்புத்தொகை செலுத்தப்படல் வேண்டும்.' என்றவாறு திருத்தம் செய்வதற்கும், குறித்த விடயம் தொடர்பான ஆலோசனை சுற்றறிக்கையை வெளியிடுவதற்கும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |