இந்தியாவை மையமாக வைத்த வியூகங்களை தமிழ் மக்கள் வகுக்க வேண்டும்!
தற்போதைய உலக சூழலில் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இந்தியாவை மையமாக வைத்து வியூகங்களை வகுக்க வேண்டிய தேவையை அதிகம் என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதிய வாராந்த அரசியல் ஆய்வு காட்டுறையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு...
வெனிசுலா ஜனாதிபதி நிக்கொலோ - மதுரோவும் துணைவியாரும் அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டமை உலகெங்கும் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
நடைமுறையில் உள்ள உலக ஒழுங்கிற்கு அமெரிக்காவே தலைமை வகித்த நிலையில் அண்மைக்காலமாக அவ் உலக ஒழுங்கை அமெரிக்காவே குழப்பி வருகின்றது.
உலக ஒழுங்கு
உலக ஒழுங்குக்கு அடிப்படையாக உள்ள பல நிறுவனங்களிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவையே நம்பியிருந்தன.
தற்போது கிறீன்லாந்து பிரச்சினையோடு ஐரோப்பாவிலேயே கைவைக்கும் நிலைக்கு அமெரிக்கா சென்றுள்ளது. ஐரோப்பிய நாடுகள் கிறீன்லாந்து கைப்பற்றப்படுவதை விரும்பவில்லை என்பதை அடையாளப்படுத்துவற்காக தமது படைகளை கிறீன்லாந்துக்கு அனுப்பியுள்ளன.
அமெரிக்காவைப் பொறுத்தவரை தற்போது கவனத்தை குவித்துள்ள விவகாரம் ஈரானும், கிறீன்லாந்தும் தான். மத்திய கிழக்கின் சமநிலையைக் குழப்ப வேண்டும் என்பதற்காகவே பிரதானமாக ஈரான் மீது கைவைக்க முனைகின்றது.
ஈரான் மீது கைவைப்பதை சவுதி, கட்டார் போன்ற நாடுகள் விரும்பவில்லை. முழு மத்திய கிழக்கிலும் அமைதியின்மை ஏற்படுமென்று அவை அஞ்சுகின்றன.
ஈரானுக்கு இது வாழ்வா? சாவா? பிரச்சினை. அதற்கு மட்டுமல்ல சீனா, ரஸ்யாவிற்கும் இது வாழ்வா? சாவா? பிரச்சினை தான், ஈரான் தனது முழுப்பலத்தையும் பிரயோகிக்கப்பார்க்கும் அணுகுண்டுத் தாக்குதல் வரை அது முன்னேறலாம் சீனாவும், ரஷ்யாவும், ஈரான் தாக்கப்பட்டால் நேரடியாக ஈரானை பாதுகாக்கும்.
ரஷ்யா “ஓர்ஸ்னிக்” ஏவுகணைகளை ஈரானுக்கு வழங்க தயாராக இருக்கின்றது.
சீனாவும் ரஷ்யாவும் நேரடியாகப் போரில் இறங்கும் வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் ஈரான் பலமாக நிற்கக்கூடிய ஒழுங்குகளை வெளியிலிருந்து செய்யப் பார்க்கும், குறிப்பாக ஆயுத உதவி, பொருளாதார உதவி என்றவற்றை வழங்க முற்படலாம்.
மறுபக்கத்தில் தமது பிராந்தியத்தில் போரை தொடங்கலாம். ரஸ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தப்படலாம். சீனா தாய்வான் மீது போரைத் தொடுக்கலாம்.
வடகொரியா தென்கொரியா மீது தாக்குதலை நடத்தலாம், இப்போக்கு 3 ம் உலகப் போருக்குக்கான வழிகளையும் திறந்து விடலாம். வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்து கடத்துவதற்கு அமெரிக்கா பலகாரணங்களைக் கூறியுள்ளது.
பிராந்திய மேலாதிக்கம்
போதைப்பொருள் கடத்தல், மனித உரிமை மீறல்கள், தேர்தல் மோசடிகள், ஆபத்தான ஆயுத உற்பத்தி என்பவற்றை பிரதானமாகக் கூறியுள்ளது. ஆனால் அரசியல் ஆய்வாளர்கள் வேறு பலகாரணங்களைக் கூறியுள்ளனர்.
ஆய்வாளர்கள் கூறுகின்ற காரணங்களில் முதலாவது பிராந்திய மேலாதிக்கமாகும். அமெரிக்காவின் ஐந்தாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் ஜேம்ஸ் மொன்றோ.
1823ல் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அது மொன்ரோ பிரகடனம் என அழைக்கப்படுகின்றது. இதன்படி ஐரோப்பிய வல்லரசுகள் அமெரிக்கா பிராந்தியத்தில் தலையீடு செய்யக்கூடாது.
அமெரிக்கா ஐரோப்பிய பிராந்தியத்தில் தலையீடு செய்யாது. இந்தப் பிரகடனத்தின் அடிப்படையில் அமெரிக்கா தனது பிராந்தியத்தில் மேலாதிக்கம் செய்து வருகின்றது.
இது தற்போது பிராந்திய வளங்களின் மேலாதிக்க நிலைக்கு வளர்ந்து டொன்றோ கோட்பாடு என அழைக்கப்படுகின்றது வெனிசுலா இந்த மேலாதிக்கத்தை மீற முற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் எதிர் வல்லரசுகளோடு மதுரோ உறவைப் பேணினார். குறிப்பாக ரஸ்யா, சீனா என்பவற்றோடு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டார்.
அமெரிக்க பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் நாடுகளை இணைத்து பிராந்தியத்திலேயே அமெரிக்க எதிர்ப்புக் கூட்டணியினை உருவாக்கினார்.
அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக இயங்கும் “பிரிக்ஸ்” அமைப்பிலும் அங்கத்தவராக சேருவதற்கு முயற்சிகளைச் செய்தார். உண்மையில் மதுரோவிற்கு முன்னர் வெனிசுலாவின் ஜனாதிபதியாக இருந்த சாவேஸ் முயற்சிகளை மதுரோ வளர்த்தெடுத்தார் என்றே கூற வேண்டும்.
மத்திய கிழக்கு
சாவேஸ் அமெரிக்காவினால் நஞ்சூட்டி கொலை செய்யப்பட்டார் என்றும் குற்றஞ் சாட்டப்படுகின்றது. இரண்டாவது காரணம் வெனிசுலாவின் எரிபொருள் வளத்தைக் கைப்பற்றுவதாகும்.
அமெரிக்கா எரிபொருளை மையமாக வைத்து பொருளாதாரத்தை கட்டமைத்துள்ள நாடாகும். எண்ணெய்க் கிணறுகளைக் கொண்டுள்ள வெனிசுலா, சவூதி அரேபியா, லிபியா, கட்டார், ஈரான் என்பவற்றை விட அமெரிக்காவின் எண்ணெய் வர்த்தகம் பெரிதானது.
இதனை இரண்டு விடயங்கள் எளிதாக்கின ஒன்று எண்ணெய் வள நாடுகளின் எண்ணெய் கம்பனிகள் பல அமெரிக்காவுக்கு சொந்தமானவையாக இருப்பவையாகும்.
இரண்டாவது எண்ணெய் வர்த்தகம் டொலர் நாணயத்தில் இடம்பெறுகின்றமையாகும். இந்த இரண்டு விடயங்களுக்கும் எதிராக எந்த நாடுகள் செயற்படுகின்றதோ அதன் மீது ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வது அமெரிக்காவின் வழக்கமாகும்.
இதன் அடிப்படையிலேயே முன்னர் ஈராக், லிபியா, சிரியா மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நாடுகளில் உள்விவகாரங்களை சுட்டிக்காட்டி தலையிட்டு எண்ணெய் வளங்களை தனது உடமையாக்க முயற்சி செய்துள்ளது.
வெனிசுலா சாவேஸ் காலத்திலேயே எண்ணெய் கம்பெனிகளை தேசிய மயமாக்கி அமெரிக்காவை வெளியேற்றியது, தொடர்ந்து டொலரில் வர்த்தகம் செய்வதை நிறுத்தி தமது சொந்த நாணயங்களிலேயே வர்த்தகம் செய்ய முயற்சித்தது.
1974 இல் ஹென்றீ கீசிங்கர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் டொலர் நாணயத்தில் எண்ணெய் வர்த்தகத்தை நடாத்த வேண்டும் என அமெரிக்கா சவூதி அரேபியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
தொடர்ந்து ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும், அதனைப் பின்பற்றத் தொடங்கின. இது எரிபொருள் வர்த்தகத்தில் அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்துவதை சுலபமாக்கியது.
சாவேஸ் ஆட்சிக்காலத்தில் எண்ணெய்க் கம்பெனிகள் தேசிய மயமாக்கப்பட்ட நிலையில் மதுரோ 2018 இல் டொலர் நாணயத்திலிருந்து விடுபட்டு சொந்த நாணயங்களில் விற்பனை செய்ய முற்பட்டார்.
இதனால் சீனாவும், ரஸ்யாவும் வெனிசுலாவிலிருந்து அதிகளவில் எண்ணெயை இறக்குமதி செய்தன. சீனா தனக்கு தேவையான எரிபொருளில் 40 வீதத்தினை டொலர் இல்லாமல் பெற்றுக் கொண்டது.
330 பில்லியன் டொலர் எரிசக்தி இருப்பை வெனிசுலா கொண்டுள்ளது. டொலருக்கு பதிலாக யூரோவில் எரிபொருட்களை விற்க முனைந்தார் என்பதால் ஈராக்கின் அதிபர் “சதாம் உசைனும், “தங்கதினார” எனும் ஆபிரிக்க நாணயத்தில் விற்க முனைந்தார் என்பதற்காக லிபியா ஜனாதிபதி கடாபியும் கொல்லப்பட்டார் என குற்றஞ்சாட்டப்படுகின்றது.
அமெரிக்காவின் கடன் சுமை
வெனிசுலாவில் எரிபொருள் வளத்திற்கு அப்பால் தங்கம், வைரம், இரும்புத் தாது போன்ற கனிம வளங்களும் இருக்கின்றன. அதனைப் பறித்தெடுப்பதும் அமெரிக்காவின் நோக்கமாக இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.
மூன்றாவது கம்யூனிச சித்தாந்தத்தை நோக்கி வெனிசுலா நகருகின்றமையாகும். கம்யூனிச நாடுகளான கியூபா, சீனா, ரஸ்யாவுடன் உறவுகளைக் கட்டியெழுப்புவதோடு ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளையும் அச் சித்தாந்தத்தை நோக்கி இழுக்க முற்படுகின்றது.
என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. மதுரோவின் முக்கிய பாதுகாவலர்களாக கியூபாவின் படை வீரர்களே இருந்திருக்கின்றனர்.
மதுரோ கைது செய்யப்பட்ட போது பல கியூபா வீரர்கள் இறந்திருக்கின்றனர். நான்காவது அமெரிக்காவின் கடன் சுமையாகும். அமெரிக்காவின் ஒட்டுமொத்த கடன் 38 ரில்லியன் ஆகும்.
2026 இல் கடனின் பெரும் பகுதியை அது திருப்பிக் கொடுக்க வேண்டும். அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமே 25 ரில்லியன் தான். எனவே கடனைத் திருப்பிக் கொடுப்பது அமெரிக்காவுக்கு கடினமானது.
இதனால் நாடுகளை ஆக்கிரமித்து அதன் வளங்களை கொள்ளையடிப்பதன் மூலம் கடனை திருப்பிக் கொடுக்க பார்க்கின்றது. மதுரோ கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டதன் விளைவுகள் பெரியதாகவே இருக்கப் போகின்றது என்ற அச்சம் இன்று உலக நாடுகள் பலவற்றுக்கும் எழுந்துள்ளது.
அதில் முதலாவது முன்னர் கூறியது போல உலக ஒழுங்கு குழப்பப் படுகின்றமையாகும். முன்னரும் பனாமா ஜனாதிபதி கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.
1989 ம் ஆண்டு பனாமாவின் ஜனாதிபதியாக இருந்த மனுவேல் நொறிக்கா இது போல கைது செய்யப்பட்டு 40 வருட காலம் சிறை வைக்கப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.
மனுவேல் நொறிகாவை வளர்த்ததே அமெரிக்கா தான். ஒரு கட்டத்தில் அமெரிக்கா நலன்களுக்கு எதிராக அவர் செயற்பட முனைந்த போதே கைது செய்யப்பட்டார்.
ஆனாலும் உலக ஒழுங்கை குழப்ப அமெரிக்கா முற்படவில்லை. அமெரிக்க அணிக்கு போட்டியாக இருந்த சோவியத் யூனியன் முழுமையாக வீழ்த்தப்படாததினால் உலக ஒழுங்கை குழப்ப அமெரிக்கா விரும்பாது இருந்திருக்கலாம்.
தற்போது போல உலக நிறுவனங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள அது முற்படவில்லை. சர்வதேச சட்டம் அமெரிக்காவிற்கு தேவையில்லை எனக் கூறவில்லை.
ஐக்கிய நாடுகள் சபை
இவ்வுலக ஒழுங்குக் குழப்பத்தினால் அதிகம் பாதிக்கப்படப் போவது ஐக்கிய நாடுகள் சபைதான். ஏற்கனவே அமெரிக்காவின் ஆதிக்கத்தினாலும், நேட்டோவை முதன்மைப் படுத்துவதனாலும் ஐக்கிய நாடுகள் சபை பலவீனமடைந்தே இருக்கின்றது.
ஆனாலும் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழான ஒரு உலக ஒழுங்கு இருந்தது எனக் கூறலாம். இனிவரும் காலங்களில் அதுவும் குழம்பப்போகின்றது.
இவ் உலக ஒழுங்கு குழம்பினால் உலகத்தைக் கட்டுப்படுத்த எந்த ஒரு கருவியும் இல்லாமல் போய்விடும். இன்றும் பெயரளவில் தான் ஐக்கிய நாடுகள் சபை இருக்கின்றது.
வல்லரசுகளுக்கு அங்கு விதிவிலக்கு உண்டு. ஆனாலும் பெயரளவிலாவது ஒழுங்குபடுத்த ஒரு சபை இருந்தது. தமிழ் மக்களுக்கு இதில் நல்ல அனுபவம் இருக்கின்றது.
தமிழ் மக்களின் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அதன் ஒரு நிறுவனமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையோ காத்திரமான வகையில் செயல்படவில்லை.
சாட்சியமில்லா யுத்தத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையே காரணமாக அமைந்தது. சர்வதேச நீதி என்பதை விட வல்லரசுகளின் பூகோள நலன்களே அங்கு ஆதிக்கம் செலுத்தின.
ஆனாலும் விவகாரத்தை பேசு பொருளாக்குவதற்கும் நீர்த்துப்போகாமல் பாதுகாப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபையும்இ ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் உதவியிருந்தன.
இந்த வகையில் உலக ஒழுங்கு குழப்பம் தமிழ் மக்களின் நலன்களையும் பாதிக்கச் செய்யும். மூன்றாவது பிராந்திய வல்லரசுகள் மேலாதிக்க நிலைக்கு வருதலாகும்.
உலக ஒழுங்கு குழம்பினால் பிராந்திய வல்லரசுகள் மேலாதிக்க நிலைக்கு வரும் அமெரிக்கா தனது பிராந்தியத்தில் தனக்கு எதிரான சக்திகளுக்கு வெனிசுலா புகலிடம் கொடுக்கின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றது எனவே வெனிசுலாவில் தலையீடு செய்வது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அவசியமெனவும் வாதிடுகின்றது.
இதே குற்றச்சாட்டை தான் ரஸ்யா உக்ரைன் மீது வைத்திருந்தது. உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால் ரஸ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சுகின்றது.
ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஆதரவளித்து உதவி செய்தன. இது அமெரிக்காவிற்கு ஒரு நியாயம் ரஸ்யாவிற்கு ஒரு நியாயமா? என்ற வாதத்தையும் எழுப்புகின்றது.
உண்மையில் அமெரிக்கா வெனிசுலாவில் தலையிட்டதன் மூலம் ரஸ்யாவை உலக எதிர்ப்பிலிருந்து பிணை எடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.
இனிவரும் காலங்களில் ஏனைய பிராந்திய மேலாதிக்கம் உள்ள வல்லரசுகளும் தமது பிராந்திய நாடுகளில் தலையீடு செய்ய முற்படலாம்.
இதன்படி சீனா தாய்வான் மீது படையெடுக்கலாம். தாய்வான் ஜனாதிபதியை கடத்திக் கொண்டு வரலாம். ரஸ்யா உக்ரைன் ஜனாதிபதியை கடத்திக் கொண்டு வரலாம்.
வடகொரியா தென்கொரியா ஜனாதிபதியை கடத்திக் கொண்டு வரலாம் இந்தியாவும் தனது பிராந்தியத்தில் மேலாதிக்க நிலைக்கு வருவதற்கு வாய்ப்பும் நியாயமும் உண்டு.
இந்தியா
தமிழ் மக்கள் இந்தியாவை சார்ந்து நிற்கும் நிலை எதிர்காலத்தில் அதிகரிக்க போகின்றது. தற்போதும் இந்த நிலை இருக்கின்றது என்பது உண்மை ஆயினும் எதிர்காலத்தில் அதன் உறுதி நிலை அதிகமாக இருக்கும்.
இலங்கை வெனிசுலாவில் அமெரிக்கா தலையிட்டது தொடர்பாக கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. அதற்குக் காரணம் அமெரிக்காவுக்குள்ள பயம் அல்ல. இந்தியாவிற்குள்ள பயமே.
இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் எவற்றிலும் இலங்கை நேர்மையாக இல்லை. இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
அமெரிக்காவுடனும் கைச்சாத்திட்டது. இந்தியாவை விட அமெரிக்காவுடன் இலங்கை சற்று நேர்மையாக நடக்கின்றது எனலாம். இந்தியாவைப் போல காலத்தை இழுத்தடித்து அமெரிக்காவை ஏமாற்ற முடியாது அதுவும் ட்ரம் ஆட்சி காலத்தில் ஏமாற்றுவதை நினைத்தே பார்க்க முடியாது.
பெருந்தேசிய வாதத்தை பொறுத்தவரையிலும் இந்திய எதிர்ப்பு இருக்கின்ற அளவிற்கு அமெரிக்க எதிர்ப்பு இருக்கின்றது எனக் கூற முடியாது.
அமெரிக்கா இலங்கையில் அளவு மீறி மேலாதிக்கம் செலுத்துவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது எண்பதுகள் போல அமெரிக்கா திருகோணமலையில் கண் வைக்கப் பார்க்கின்றது என்ற அபிப்பிராயங்கள் வருகின்றன.
இந்தியா இதனை அனுமதிக்க போவதில்லை ட்ரம் ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்க - இந்திய உறவுகளும் சீராக இல்லை. ட்ரம் பின் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் உலக ஒழுங்கில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே தான் எழுதிய “இந்திய வழி நிச்சயமற்ற உலகுக்கான வியூகங்கள்” என்ற நூலில் கூறியிருக்கின்றார்.
அமெரிக்காவுக்கு முதலிடம்
“அமெரிக்காவுக்கு முதலிடம்” என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கண்ணோட்டமும் “உலக வல்லரசு சீனா தான்” என்ற அந்நாட்டின் கனவும் உலக உறவுகள் அணி மாற களம் அமைத்துக் கொடுக்கின்றன என்றும் அந் நூலில் அவர் கூறியிருக்கின்றார்.
தற்போது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நெருக்கத்தை விட சீனாவுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான நெருக்கம் அதிகம் எனலாம்.
பிறிக்ஸ் அமைப்போடும் இந்தியா நெருக்கமாக உள்ளது. அமெரிக்கா பெரிய அழுத்தங்களை கொடுத்த போதும் ரஸ்யாவுடனான எரி பொருள் வர்த்தகத்தை இந்தியா நிறுத்தி விடவில்லை.
எனவே எதிர்காலத்தில் இந்தியா மேலெழுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது எனக் கூறலாம். இதனால் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இந்தியாவை மையமாக வைத்து வியூகங்களை வகுக்க வேண்டிய தேவையை அதிகம் உருவாக்கியுள்ளது.
அந்த வியூகம் தாயகம்- சென்னை - புதுடில்லி என்பதை வழிப்பாதையாக கொண்டிருக்க வேண்டியது அவசியமானது. அமெரிக்க இந்திய உறவு பலவீனமாகமாக இருந்தால் இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு தமிழ் மக்களின் விவகாரங்களைப் கையிலெடுக்கப் பார்க்கும் இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்த் தரப்பு நேரடியாக புதுடில்லியை அணுகாமல் சென்னைக் கூடாக அணுகுவது அழுத்தங்களை அதிகரிக்கும்.
இந்திய நலன்களுக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்கும் இடையேயான பொதுப் புள்ளியை கண்டுபிடித்து அதனை பலப்படுத்துவது இது விடயத்தில் ஆரோக்கியமாக இருக்கும்.
கஜேந்திரகுமார் இந்த விடயத்தில் முதல் காலடியை எடுத்து வைத்துள்ளார். அதனைப் பலப்படுத்துவது அனைவரும் கடமையாகும். முதல் காலடியின் விளை பயனும் கண்ணுக்கு புலப்படத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலின் இந்திய பிரதமருக்கு இலங்கைத் தமிழர் தொடர்பான வலுவான கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த வகையில் கஜேந்திரகுமார் தமிழ்நாடு பங்குபற்றல் தொடர்பான தேக்கத்தை உடைத்திருக்கின்றார்.
இந்தியாவைக் கையாளல் விடயத்தில் கட்சி அரசியல் தவிர்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கட்சிகள் இவ்விடயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுதல் மிகவும் அவசியமானது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |