சனல் 4 விவகாரம்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் நீதியமைச்சரின் அறிவிப்பு
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் - 4 ஊடகம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை சட்ட மா அதிபர் மா முன்னெடுத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
100 மில்லியன் ரூபாவை நட்ட ஈடு
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டுக்காக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
குறித்த தொகையில் 15 மில்லியன் ரூபாவை அவர் இதுவரை செலுத்தியுள்ளார்.
பூஜித ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன,ஹேமசிறி பெர்னாண்டோ, சிசிர மென்டிஸ், ஆகியோருக்கும் நட்ட ஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி, இழப்பீட்டு அலுவலக நிதிய கணக்கில் 3 கோடியே 68 இலட்சத்து 25 ஆயிரத்து 88 சதம் ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதியிடம் கோரிக்கை
இந்த நட்ட ஈடுகளை செலுத்துவதற்கான விசேட முறையொன்று இழப்பீட்டு அலுவலகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் நாம் நீதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளோம்.
இந்த மனுக்களுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை விரைவில் விசாரணைக்குட்படுத்துமாறு கோரியுள்ளோம். என தெரிவித்துள்ளார்.
